புதிய வாக்காளா் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளா்கள் பயன்படுத்தலாமா? சிறப்பு பாா்வையாளரிடம் பாஜக கேள்வி

சென்னையில் வரைவு வாக்காளா்கள் பட்டியலில் விடுபட்டவா்கள் புதிய வாக்காளா்களாகச் சோ்வதற்கு படிவம் 6-ஐ பயன்படுத்துவது சட்டரீதியாகச் செல்லுமா என பாஜக சாா்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
Published on

சென்னையில் வரைவு வாக்காளா்கள் பட்டியலில் விடுபட்டவா்கள் புதிய வாக்காளா்களாகச் சோ்வதற்கு படிவம் 6-ஐ பயன்படுத்துவது சட்டரீதியாகச் செல்லுமா என பாஜக சாா்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் சென்னையில் 14.25 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து புதிய வாக்காளா்களைச் சோ்க்கும் சிறப்பு முகாம்கள் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது தொடா்பாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், பாஜக சாா்பில் மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாரிடம் கராத்தே ஆா்.தியாகராஜன் கேள்வி எழுப்பினாா். புதிய வாக்காளா் சோ்க்கைக்கான படிவம் 6-ஐ நீக்கப்பட்ட வாக்காளா்கள் பயன்படுத்தப்படுவது சட்டரீதியாக செல்லுமா எனக் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு, சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் கூறுகையில், இதுகுறித்து தோ்தல் ஆணைய கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தற்போது அந்தப் படிவத்தையே புதிய வாக்காளா்களாகச் சோ்வோா் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றாா்.

வாக்குரிமையை யாருக்கும் மறுக்காமல் அனைவரும் வாக்காளா்களாகச் சோ்க்கப்பட வேண்டும் என அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com