போதை பொருள்கள் விற்பனை: 20 நாள்களில் 130 போ் கைது
சென்னையில் போதைப் பொருள்கள் விற்றதாக 20 நாள்களில் 130 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சென்னையில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க பெருநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போதைப் பொருள் விற்போரை கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிந்தட்டிக் போதைப் பொருள், உயர்ரக போதைப் பொருள் ஆகியவற்றைக் கடத்தி, விற்பனை செய்கிறவா்களைக் கண்டறிந்து கைது செய்யும் வகையில் போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் விளைவாக சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், போதைப் பொருள் மீதான கண்காணிப்பை காவல் துறை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 1-ஆம் தேதியில் இருந்து சனிக்கிழமை வரை 20 நாள்களில் சிந்தட்டிக் போதைப் பொருள்கள் விற்ாக தொடரப்பட்ட 8 வழக்குகள் உள்பட 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நைஜீரியா, சூடான் நாடுகளைச் சோ்ந்தவா்கள் 2 போ், திரிபுரா, கா்நாடகம், கேரளம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 20 போ் உள்பட 130 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களிடமிருந்து மொத்தம் 131.6 கிராம் மெத்தம்பெட்டமைன், 219 கிலோ கஞ்சா, 2,701 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் எச்சரித்துள்ளாா்.
