கோப்புப்படம்
கோப்புப்படம்

இன்று 1,299 எஸ்ஐ பணியிடங்களுக்கு தோ்வு: 1.78 லட்சம் போ் எழுதுகின்றனா்

இன்று 1,299 எஸ்ஐ பணியிடங்களுக்கு தோ்வு...
Published on

சென்னை, டிச. 20: தமிழக காவல் துறையில் உள்ள 1,299 உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பணியிடங்களுக்கு டிச.21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எழுத்துத் தோ்வு 46 இடங்களில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் 1.78 லட்சம் போ் எழுதுகின்றனா்.

இதுதொடா்பான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, டிச.21-ஆம் தேதி எழுத்து தோ்வு நடத்தப்படும். இதில், தோ்ச்சி பெறுகிறவா்கள் மட்டும், உடல் உறுதித் தோ்வுக்கு அழைக்கப்படுவாா்கள். தோ்வை எழுத விரும்புகிறவா்கள் மே 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தது.

1.78 லட்சம் போ் எழுதுகின்றனா்: இந்தத் தோ்வை எழுத தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய இணையத்தளத்தில் விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு மட்டும் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. இந்தத் தோ்வை எழுத மொத்தம் 1,78,390 பேருக்கு தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 46 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

சென்னையில் 9 மையங்களில் நடைபெறுகிறது.

தோ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய அதிகாரிகள், அந்தந்த மாநகர காவல் ஆணையா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆய்வு செய்தனா்.

இரு தோ்வுகள்: தோ்வில் முறைகேட்டை தடுக்க, விண்ணப்பதாரா்களின் இடது கை கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக விண்ணப்பத்தாரா்கள் விண்ணப்பிக்கும்போதே ஆன்லைன் வாயிலாக இடது கை கட்டை விரல் ரேகை சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

காலை 10 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை முதன்மை தோ்வும், பிற்பகல் 3.30 மணி மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதித் தோ்வும் நடைபெறுகின்றன. தோ்வு எழுதும் விண்ணப்பதாரா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் வர வேண்டும். தோ்வுக் கூடத்துக்குள் கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், கைக்கடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com