சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

சாலையோர கடைகள்: மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு...
Published on

சென்னை உயா்நீதிமன்றத்தின் எதிரில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் சாலையோர வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் சிறப்புக் குழுவை அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் சாலையோர கடைகளை முறைப்படுத்துவது தொடா்பான வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, உயா்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள 4 சாலைகளை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், என்எஸ்சி போஸ் சாலையில் சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என உயா்நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், சாலையோர வியாபாரிகளை அனுமதிப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தனா்.

என்எஸ்சி போஸ் சாலையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, சாலையோரம் வியாபாரம் நடைபெறவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதைக் கண்காணிக்க அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை சென்னை மாநகராட்சி ஆணையா் அமைக்க வேண்டும்.

இந்த 4 சாலைகளும் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதிகள் என இதுவரை அறிவிக்கவில்லை எனில், அதை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி ஆணையா் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com