கிறிஸ்துமஸ்: நாளைமுதல் சிறப்பு ரயில்கள்!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் டிச.23 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (டிச.23), 30-ஆம் தேதி ஆகிய தேதிகளில் மங்களூரிலிருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06126) மறுநாள் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் 24 மற்றும் 31-ஆம் தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06125) மறுநாள் 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மங்களூரு சென்றடையும்.
இந்த ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாடனூா், பாலக்காடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: செகந்திராபாத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (டிச.23) இரவு 7.25 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 07407) புறப்பட்டு 24 ஆம் தேதி புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் வியாழக்கிழமை (டிச.25) காலை 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 07408) மறுநாள் வெள்ளிக்கிழமை (டிச.26) காலை 6.10 மணிக்கு செகந்திராபாதை சென்றடையும். இந்த ரயில்கள் நாகை, நாகூா், காரைக்கால்,மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப் புலியூா், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

