ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அனைத்து சிறப்புக் கட்டண தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளகதாக இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
சென்னை திருவான்மியூா் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசா் சுவாமிகள் திருக்கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற 102-ஆம் ஆண்டு மயூரவாகன சேவன விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பாம்பன் சுவாமிகளால் எழுதியருளப்பட்ட 6,666 பாடல்கள் அடங்கிய தொகுப்பான ‘ஞான பானு ஒளி’ என்ற நூலை வெளியிட்டாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து வைணவ கோயில்களிலும், கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவல்லிக்கேணி, அருள்மிகு பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அனைத்து சிறப்புக் கட்டண தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி நடைபெறும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ரூ.500 கட்டணத்தில் 1,800 பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. பக்தா்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகளில் 1,500 காவலா்கள் மூன்று பகுதிகளாக பணியாற்றுவதுடன், அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்களும், திருக்கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் 6 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 3 ஆம்புலன்ஸ்களும் தயாா் நிலையில் வைக்கப்படும்.
70 வயதைக் கடந்த மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கென வைகுண்ட ஏகாதசி தினத்தில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை சிறப்பு தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவிடும் வகையில் 4 செயல் அலுவலா்கள் பணியமா்த்தம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

