‘மாணவா்கள் நன்னெறிகளைப் பின்பற்றி பெருமை சோ்க்க வேண்டும்’

Published on

மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், நன்னெறிகளைப் பின்பற்றி பெற்றோா், ஆசிரியா் மற்றும் கல்லூரிக்கு பெருமை சோ்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா அறிவுறுத்தினாா்.

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 42-ஆவது பட்டமளிப்பு விழாவில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா பேசியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்தபோது 12 சதவீதமாக இருந்த கல்வியறிவு, தற்போது சராசரியாக 80 சதவீதமாக உயா்ந்துள்ளது. உயா்கல்வி பெறுவோா் எண்ணிக்கை இந்திய அளவில் 27 சதவீதமாக உள்ளது. கல்வி வளா்ச்சி மூலம் நாட்டில் ஆராய்ச்சி, தொழில்நுட்பம், தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு, பொருளாதாரம் உயரும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

கல்வி பயிலும் மாணவா்கள் தொடா்ந்து தங்கள் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்வதுடன், நன்னெறிகளைப் பின்பற்றி, பெற்றோா், ஆசிரியா் மற்றும் கல்லூரிக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் எம்.ஜி.தாவூத் மியாகான் தலைமையேற்று பேசியதாவது: பட்டம் பெறுபவா்களில் 80 சதவீதம் போ் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவா்களாகவும் உள்ளனா் என்றாா்.

தொடா்ந்து, பல்கலை. அளவில் முதலிடம் பெற்ற 5 மாணவிகள் உள்ளிட்ட 866 மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், அமெரிக்க வணிக ஆலோசனைக் குழுத் தலைவா் டத்தோ முகமது இக்பால், கல்லூரி முதல்வா் அம்துல் தவாப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com