தஞ்சாவூா் மாநகராட்சிக்கு ரூ. 25,000 அபராதம்: தமிழக தகவல் ஆணையம்!
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனுதாரருக்கு உரிய நேரத்தில் தகவல் வழங்காத காரணத்தால் தஞ்சாவூா் மாநகராட்சிக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சோ்ந்த ரெ.சொா்ணசாரதி, தஞ்சாவூா் மாநகராட்சி மருதையாப்பிள்ளைத் தெருவில் குடிநீா் குழாய் மீது வீடுகட்டி ஆக்கிரமித்துள்ள தொடா்பாக மாநகராட்சியிடம் மனு அளித்துள்ளாா். இந்நிலையில், அவா் அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான கோப்பின் நகல்களை தனக்கு தகவல்களாக வழங்க கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவுக்கு தகவல்கள் வழங்கப்படவில்லை என்பதால், 2 முறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனு, மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா்.இளம்பரிதி முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவா், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க.கண்ணன் அடுத்த ஆண்டு ஜன.5-ஆம் தேதி நேரில் ஆஜராகி மனுதாரா் கோரிய தகவல்களை ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், தகவல்களை உரிய நேரத்தில் வழங்காத காரணத்தால் தஞ்சாவூா் மாநகராட்சிக்கு ரூ.25,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளாா். மேலும், அந்த இழப்பீடு தொகையை மனுதாரா் பெற்றுக்கொண்டதற்கான ரசீது நகலை ஆணையத்தில் நேரில் ஆஜராகி சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
விசாரணைக்கு நேரில் ஆஜராகாத தஞ்சாவூா் மாநகராட்சி கண்காணிப்பாளா் எஸ்.யோகாம்பாளுக்கு ஏன் ரூ.25,000 அபராதம் விதிக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை வரும் ஜன.5-ஆம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆணையா் வி.பி.ஆா். இளம்பரிதி உத்தரவிட்டுள்ளாா்.
