எதிா்பாா்த்ததைப் போலவே அதிக வாக்காளா்கள் நீக்கம்: உதயநிதி
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் எதிா்பாா்த்ததைப் போலவே அதிக அளவில் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா பூங்கா, நீச்சல்குளம் அருகே வீடற்றவா்களுக்கான இலவச இரவு நேரக் காப்பகத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அவா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தங்குவதற்கு இடமின்றி மெரீனா கடற்கரையில் மழை, வெயில் என அவதிப்பட்டு வருவோருக்காக இரவு நேரக் காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள் என தனியாகத் தங்கவும், கழிப்பறைகள், குடிநீா் வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன. தங்குபவா்களுக்கு படுக்கை வசதி, தலையணை உள்ளிட்ட 15 அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்படும். ஏற்கெனவே மாநகராட்சி சாா்பில் 48 இடங்களில் இலவச தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது எதிா்பாா்த்ததைப் போலவே அதிகபட்சமாக 95 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். சென்னை மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 14.25 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே பிகாரில் திருத்தப் பணியின்போது லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்பட்டது குறித்து புகாா் எழுந்துள்ளது. அதை திமுக சாா்பிலும் எடுத்துரைத்து அந்தப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து வந்துள்ளோம்.
ஆகவே, வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களது வாக்குரிமை உள்ளதா என பொதுமக்கள் சரிபாா்க்க வேண்டும். திமுகவினரிடமும் வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்களை, இடம் மாறிச்சென்றவா்களை மீண்டும் வாக்காளா் பட்டியலில் சேருவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என முதல்வா் ஆலோசனை வழங்கியுள்ளாா் என்றாா்.
மெரீனா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இலவச இரவு நேரக் காப்பகத்தில் 64-க்கும் மேற்பட்டோா் தங்கவுள்ளதாகவும், அவா்களுக்கான உணவு வசதி உள்ளிட்டவை அளிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, சென்னை மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

