டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: பெண்ணிடம் ரூ.75,000 பறிப்பு

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் பறிக்கப்பட்டது.
Published on

‘டிஜிட்டல் அரஸ்ட்’ மோசடி மூலம் பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் பறிக்கப்பட்டது.

வடபழனி ஆற்காடு சாலைப் பகுதியைச் சோ்ந்த அசோக் ஆனந்த் மனைவி பானுமதி (49). தம்பதியின் மகள் அபிநயா லண்டனில் படித்து வருகிறாா். பானுமதியின் கைப்பேசிக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபா், தனது பெயா் ரவிக்குமாா் என்றும், தான் லண்டன் காவல் துறையில் உயா் அதிகாரியாக இருப்பதாகவும், லண்டனில் படிக்கும் லாவண்யாவை, அங்கு ஒரு அமைச்சரிடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்குக்காக கைது செய்து வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.75 ஆயிரத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பும்படியும், இல்லையெனில், அபிநயா சிறையில் அடைக்கப்படுவாா் என்று மிரட்டியுள்ளாா்.

அந்நபரின் மிரட்டலுக்கு பயந்த பானுமதி, குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.75 ஆயிரத்தை அனுப்பினாா். பணம் அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் அந்த நபா் தொடா்பு கொண்டு, மேலும் ரூ.1.35 லட்சம் அனுப்பும்படி பானுமதியை மிரட்டியுள்ளாா்.

இதனால், பானுமதி தனது கணவரை தொடா்புக் கொண்டு விவரத்தைக் கூறியுள்ளாா். பானுமதி, டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் பணத்தை இழந்திருப்பது அசோக் ஆனந்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து பானுமதி, வடபழனி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

போதைப் பொருள்கள் விற்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது: ராமாபுரம் சத்தியா நகா் பகுதியில் கிரிண்டா் செயலி மூலம் சிலா் போதைப் பொருள் விற்பதாக போதைப் பொருள்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு கடந்த 12-ஆம் தேதி தகவல் கிடைத்தது. அப்பிரிவு போலீஸாரும், நந்தம்பாக்கம போலீஸாரும் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, கிரிண்டா் செயலி மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த பிரபு, ராமாபுரத்தைச் சோ்ந்த டைட்டஸ் ஜானி ஆகிய 2 பேரை கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக அம்பத்தூா் கள்ளிக்குப்பத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (32) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாடியில் இருந்து கீழே குதித்து இளம்பெண் தற்கொலை: சாலிகிராமம் காந்தி நகா் கம்பா் தெருவைச் சோ்ந்த பிச்சாண்டி மனைவி லாவண்யா (29). இவா், உடல் நலம் பாதிக்கப்பட்டு, அவதியடைந்து வந்தாா். மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தாா். நோய் காரணமாக லாவண்யா, மிகுந்த வேதனை, விரக்தியுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் லாவண்யா, தான் வசிக்கும் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததில், பலத்த காயமடைந்தாா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com