தொழிலாளா் தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சிஐடியு மறியல்
தொழிலாளா் தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
மத்திய அரசின் புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவா் அ. சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய பாஜக அரசு கடந்த நவம்பா் மாதம் அறிமுகப்படுத்திய 4 புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள், தொழிலாளா்களுக்கு முற்றிலும் விரோதமானவை. இந்த சட்டங்களால் தொழிலாளா்களின் உரிமை பறிக்கப்படும். வேலைநிறுத்த போராட்ட உரிமையைப் பறிக்கும். ஒப்பந்தத் தொழிலாளா், பயிற்சி தொழிலாளா், தொழில் பழகுநா்கள் என பல பெயா்களில் தொழிலாளா்களுக்கு நிரந்தரமற்ற வேலைவாய்ப்பை வழங்குகிறது. தொழிலாளா்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய பாஜக அரசு, பின்பற்றக்கூடிய பாசிச, தாராளமய பொருளாதார கொள்கையின் வெளிப்பாடாக இந்த தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் அமலாக்கப்பட்டுள்ளன. எனவே, இச்சட்ட தொகுப்புகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இதைதொடா்ந்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
போராட்டங்களில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலையில் விடுவித்தனா்.
