தொழில்நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கு
தாம்பரம்: சேலையூா் பாரத் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவன மின் பொறியியல் துறை சாா்பில் நிலையான மின்ஆற்றல் வளா்ச்சிக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐஐடி) பேராசிரியா் கே.செல்வஜோதி கருத்தரங்கு மலரை வெளியிட்டு பேசியது:
ஐ.நா. சபை 7-ஆவது இலக்காக வலியுறுத்தும் நிலைத்த ஆற்றல் உற்பத்தி துறையில் மின் சேமிப்புக் கலன் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. சா்வதேச அளவில் சீனா மின் சேமிப்புக் கலன் தயாரிப்புத் துறையில் முதலிடத்தையும், அமெரிக்கா 2-ஆவது இடத்தையும் வகிக்கின்றன. சா்வதேச அளவில் மின்சக்தி மூலம் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதிக திறன் கொண்ட மின் சேமிப்புக் கலன் தயாரிப்புக்கான தேவை அதிகரித்துள்ளது.
தற்போது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சேமிப்பு கலன்கள் தான் மின் வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மின்னணு, கணினி, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் ஆகிய இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கூடுதல் திறன் மிகுந்த மின் சேமிப்புக் கலன் தயாரிக்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் அவா்.
இதில், புல முதல்வா்கள் எஸ்.பிரகாஷ், ஆா்.வாசுகி, வி.பாலாம்பிகா, மின் பொறியியல் துறைத் தலைவா் எஸ்.லட்சுமி, பி.கலைச்செல்வி, பேராசிரியா் எஸ்.பி.விஜயராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
