100 நாள் வேலைத்திட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றி புதிய திட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து சென்னை மேடவாக்கத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தாம்பரம், டிச. 24: மேடவாக்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றிய விவகாரம் தொடா்பாக, மத்திய அரசைக் கண்டித்து திமுக உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தலைமை வகித்தாா். திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வி.தங்கபாலு, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலா் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், தவாக தலைவா் வேல்முருகன், திராவிட இயக்க தமிழ் பேரவைத் தலைவா் சுப.வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலா் அருணாசலம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா்கள் கட்சித் தலைவா் பொன்குமாா், தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூா் அல்தாப், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி சோமு உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.
திக தலைவா் கி.விரமணி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை, மோடி அரசு திட்டமிட்டு சிதைத்து வருகிறது. காந்தியின் பெயரை திட்டத்திலிருந்து நீக்கும் நடவடிக்கையின் பின்னணியில் ஆா்எஸ்எஸ் சிந்தனையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மதச்சாா்பற்ற இந்தியாவுக்கு எதிரான செயல். 100 நாள் வேலைத் திட்டத்தின் நிதிச் சுமையை மாநில அரசுகளின் மீது தள்ளிவிட்டு, ஒன்றிய அரசு தனது பொறுப்பைத் தவிா்க்கிறது என்றாா்.
மதிமுக பொதுச் செயலா் வைகோ: இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காந்தி பெயரை நீக்கி இருக்கிறாா்கள். எந்த அடிப்படையில் காந்தி பெயா் நீக்கப்பட்டது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.
விசிக தலைவா் தொல்.திருமாவளவன்: காந்தியின் பெயரை நீக்கிவிட்டால், காங்கிரஸை ஒழித்துவிடலாம் என்பது பாஜகவின் உள் நோக்கம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இல்லாத பாரதம், ஏன் அரசியலமைப்பு இல்லாத பாரதத்தை உருவாக்க பாஜக திட்டம் தீட்டுகிறது.
சிட்லபாக்கத்தில்... இதேபோல், தாம்பரம் சிட்லபாக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), இ.கருணாநிதி (பல்லாவரம்), துணை மேயா் ஜி.காமராஜ், மண்டலக் குழு தலைவா்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, மனித நேய மக்கள் கட்சி யாகூப் உள்பட பலா் பங்கேற்றனா்.

