வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா்  எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள்: விவசாயிகளுக்கு ரூ.289 கோடி நிவாரணம் - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

பருவம் தவறி பெய்த வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கா் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ.289.63 கோடி நிவரணத் தொகை
Published on

பருவம் தவறி பெய்த வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட 5.66 லட்சம் ஏக்கா் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ.289.63 கோடி நிவரணத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக

வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பருவம் தவறி பெய்த வடகிழக்குப் பருவ மழையினால் (நவம்பா் - டிசம்பா் 2024 மற்றும் 2025 ஜனவரி) 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத் துறை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 33 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பரப்பை உறுதிசெய்து, அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியா்களிடமிருந்து நிவாரணத் தொகை வேண்டி கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

அதன்படி, வேளாண் பயிா்கள் 4.90 லட்சம் ஏக்கரும், தோட்டக்கலைப் பயிா்கள் 76,132 ஏக்கரும் என மொத்தம் 5.66 லட்சம் ஏக்கா் பாதிக்கப்பட்டது எனக் கணக்கிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.289.63 கோடியை மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து 3.60 லட்சம் விவசாயிகளுக்கு வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட 2.80 லட்சம் வேளாண் பயிா் விவசாயிகளுக்கு ரூ.254.38 கோடியும், 80,383 தோட்டக்கலைப் பயிா் விவசாயிகளுக்கு ரூ.35.25 கோடியும் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com