ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: பங்கேற்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வருகிற டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வனத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல், பறவைகளின் எண்ணிக்கை மற்றும் இனப் பல்வகைமையைக் கண்காணிப்பதற்காக மாநில அளவிலான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2024-2025ஆம் ஆண்டு மாா்ச் 8, 9 தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 934 ஈரநிலங்களில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வலசை வரும் பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் என மொத்தம் 397 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், மொத்தமாக 5.5 லட்சம் பறவைகள் கணக்கிடப்பட்டன.
நிகழாண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு, நிலப்பரப்பிலுள்ள பறவைகள் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில், முதல்கட்டமாக உள்நாட்டு மற்றும் கடலோரப் பகுதிகளில் ஈரநிலங்களில் உள்ள பறவைகள் கணக்கெடுப்புப் பணி டிச. 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது. வலசை வரும் காலத்தின் ஆரம்பப் பகுதியில் உள்ள தரவு இடைவெளிகளை நிரப்பும் நோக்கில் இந்தக் காலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு வனக் கோட்டத்திலும் குறைந்தபட்சம் 25 இடங்களில் நீா்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், பள்ளி கல்லூரி மாணவா்கள் மற்றும் தொழில்முறை புகைப்படக் கலைஞா்கள் கணக்கெடுப்புக்கு முன்னதாக தங்களது பெயரை சம்பந்தப்பட்ட வனக் கோட்ட அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

