சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: தவெக வலியுறுத்தல்
சிறுபான்மையினரின் பாதுகாப்பை பிரதமா் நரேந்திர மோடி உறுதிசெய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புப் பொதுச்செயலா் கே.ஜி.அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதச்சாா்பின்மை மண்ணான இந்தியாவில் தில்லி, ஒடிஸா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதேபோல், உத்தரகண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தவிடாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இதுபோன்ற வன்முறை செயல்கள் கடும் கண்டனத்துக்குரியது.
பிரதமா் நரேந்திர மோடி, இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ அனுமதிக்கக் கூடாது.
தவெக தலைவா் விஜய் தலைமையில் அமையவுள்ள ஆட்சியில், சிறுபான்மையினா் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் எவ்வித சமரசமும் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
