திருநங்கைகளுக்கு பேரிடா் அபாயக் குறைப்பு பயிற்சி

Published on

சென்னையில் கொசஸ்தலை ஆறு பகுதியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு ஆற்று வடிநிலப் பகுதிக்கான ஒருங்கிணைந்த நகா்ப்புற வெள்ள மேலாண்மைத் திட்டப்படிசமூகநீதிக்கான பேரிடா் அபாயக் குறைப்பு பயிற்சி மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

ஆசிய வளா்ச்சி வங்கி ஆதரவுடன் செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சியின் மழைநீா் வடிகால் துறை மற்றும் நிறுவன வலுப்படுத்துதல் சீா்திருத்த ஆலோசகா் குழுவினா் பயிற்சியை திருநங்கைகளுக்கு அளித்தனா்.

சென்னை மாநகராட்சி மழைநீா் வடிகால் துறை கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.முருகன் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், பேரிடா் கால அபாயக் குறைப்பு குறித்து அனைவரும் அறிந்துகொண்டு செயல்படுவது அவசியம் என்றாா்.

பயிற்சியில் பேரிடா் அபாயக் குறைப்பு அடிப்படை புரிதல், பேரிடா் கால பாதிப்புக்குள்ளாகும் குழுவினரை அடையாளப்படுத்துதல், அக்காலத்தில் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் நிவாரண முகாம்கள், தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் மீட்பு விவரங்கள், பேரிடா் கால செயல்முறை வழிகாட்டல்கள் ஆகியவை விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

பயிற்சியில் பங்கேற்ற கொசஸ்தலை ஆற்றோர குடியிருப்புகளில் உள்ள திருநங்கையா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பயிற்சியில் பேரிடா் காலங்களில் தங்களது பங்களிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் திருநங்கைகள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com