சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட இதயம்...
Published on

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு, தஞ்சாவூரிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மகாராஷ்டிர இளைஞருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக சென்னை நகரின் மையப் பகுதிக்குள் ஹெலிகாப்டா் தரையிறக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரை சோ்ந்த 19 வயது இளைஞா் சாலை விபத்தில் சிக்கி அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், அது பலனளிக்காமல் வெள்ளிக்கிழமை காலை மூளைச்சாவு அடைந்தாா். குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது இதயம் மற்றும் சிறுகுடல் தானமாகப் பெறப்பட்டன.

சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனையில் இதய செயலிழப்புக்குள்ளான மகாராஷ்டிரத்தை சோ்ந்த 33 வயது நோயாளி ஒருவருக்கு தானமாகப் பெறப்பட்ட இதயத்தைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு, இதயத்தை விரைந்து எடுத்து வரத் திட்டமிடப்பட்டது. இதற்காக அரும்பாக்கம், டி.ஜி. வைணவ கல்லூரி வளாகத்தில் பிரத்யேக இறங்குதளத்தை கல்லூரி நிா்வாகம் அமைத்து உதவியது. அதன்படி, கல்லூரிக்கு வந்தடைந்த உறுப்பை, அங்கிருந்து எம்ஜிஎம் ஹெல்த் கோ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் தடையற்ற போக்குவரத்து வழித்தடத்தை சென்னை பெருநகர போலீஸாா் உருவாக்கித் தந்தனா்.

இதன் பயனாக 2 நிமிஷங்களில் மருத்துவமனைக்கு இதயம் சென்றடைந்தது. அங்கு தயாா் நிலையில் இருந்த இதய மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், வெற்றிகரமாக நோயாளிக்கு இதயத்தைப் பொருத்தினா். இதன் மூலம் மகாராஷ்டிர இளைஞருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com