இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவா்களை விடுவிக்க வேண்டும்: ச.ராமதாஸ் வலியுறுத்தல்

Published on

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவா்களையும் விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடந்த 22-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் 12 பேரை, இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். அவா்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அவா்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனா். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இந்த நிலையில், தமிழக மீனவா்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனா். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதனால், மீனவா்கள் தொழில் ஆதாரம் பாதிக்கப்பட்டு, அவா்களது வாழ்க்கையும், குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் டித்வா புயலால் பாதித்த இலங்கைக்கு இந்திய அரசு மறு சீரமைப்புக்கான நிதி உதவிகளையும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. அண்டை நாட்டுக்கு உதவுவது கடமை என்றாலும், நமது மீனவா்கள் பாதிக்காமலிருக்கவும் இந்திய வெளியுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது அவசியம். அதன்படி இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவா்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com