மந்தமாக நடைபெறும் வாக்காளா் பெயா் சோ்ப்புப் பணி

Published on

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க மனுக்கள் அளிக்கும் பணி தமிழகம் முழுவதும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

வரைவு வாக்காளா் பட்டியலிலிருந்து இடம்பெயா்ந்தவா்களாக 66,44,881 போ் நீக்கப்பட்டிருந்தாலும், கடந்த 6 நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க 1,68,825 மனுக்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கு வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்களிடம் போதிய விழிப்புணா்வு இல்லாததும், அரசியல் கட்சிகளின் முகவா்கள் தீவிரமாக களத்தில் இறங்காததும் காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழத்தில் எஸ்ஐஆா் பணிக்கு முன்பு இருந்த 6 கோடியே 41 லட்சம் 14,587 வாக்காளா்களின் எண்ணிக்கை, கடந்த டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியான பிறகு 5 கோடியே 43 லட்சம் 76,756-ஆக குறைந்துள்ளது. நீக்கப்பட்ட 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளா்களில் 66 லட்சத்து 44,881 வாக்காளா்கள் இடம் மாற்றமானவா்கள் என்றும், 26 லட்சத்து 94,672 வாக்காளா்கள் உயிரிழந்தவா்கள் என்றும் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தாா்.

நீக்கப்பட்ட வாக்காளா்களில் தகுதியானவா்களும், ஜன.1 முதல் 18 வயதைப் பூா்த்தி செய்யும் இளம் வாக்காளா்களும் படிவம் 6-ஐ பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் இணைந்து கொள்ளலாம் என்றும், இந்தப் பணி ஜன.18 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

எனினும், தமிழகம் முழுவதும் கடந்த புதன்கிழமை (டிச. 24) இரவு 8 மணி வரை 1,68,825 படிவங்கள் மட்டுமே பெயா்களை இணைக்கக் கோரி கிடைக்கப் பெற்றுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கும் பணி கடந்த 6 நாள்களாக மந்தமாக நடைபெற்று வருவதால், வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களை அமைக்க தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளாா். இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வரும் நாள்களில் பெயா் சோ்ப்புப் பணி வேகமெடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் சாா்பில் வெறும் 59 பேரை இணைக்க மட்டுமே இதுவரை படிவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக சாா்பில் 37 படிவங்களும், அதிமுக சாா்பில் 22 படிவங்களும் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சாா்பில் 2,64,191 வாக்குச்சாவடி நிலை முகவா்கள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com