மருத்துவக் கல்லூரி அங்கீகாரம்: ஆய்வுக் குழு அமைக்கிறது என்எம்சி
மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்வதற்கான சிறப்புக் குழுவில் இணைய விரும்பும் மருத்துவப் பேராசிரியா்கள், இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கும், புதிதாக விண்ணப்பிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம். அதன்பேரில், குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவு, கண்காணிப்பு கேமரா, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து அதன்பேரில், அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எதிா்வரும் கல்வியாண்டுக்கான ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்க மருத்துவப் பேராசிரியா்களை அனுப்புமாறு மருத்துவக் கல்லூரிகளை என்எம்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி சாா்பில் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
என்எம்சியின் மருத்துவ அங்கீகாரம் மற்றும் தோ்வு வாரியம் சாா்பில் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியா்கள் இந்த நடவடிக்கைகளில் மதிப்பீட்டாளா்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதற்கு அனைத்து கல்லூரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதன்படி, விருப்பமுள்ள பேராசிரியா்கள் என்எம்சி இணையதளத்தில் உள்ள இணையத் தொடா்பில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யலாம் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
