வேலுநாச்சியாா் நினைவு தினம்: இபிஎஸ், நயினாா் நாகேந்திரன் புகழஞ்சலி
விடுதலைப் போராட்ட வீரா் வேலுநாச்சியாரின் நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக பொதுச் செயலா்): ஒப்பற்ற துணிவுடனும், நிகரில்லா விவேகத்துடனும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பெரும்படை திரட்டிய முதல் பெண் விடுதலைப் போராளி ராணி வேலு நாச்சியாா். தமிழினப் பெண்களின் வீரத்துக்கு சான்றாக திகழும் நம் பெரும் பாட்டியாா், பேரரசி வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளில் அவரது வீரம், தியாகம் மற்றும் தேசபக்தியைப் போற்றி வணங்குகிறேன்.
நயினாா் நாகேந்திரன் (தமிழக பாஜக தலைவா்): வீரமும் அறிவும் ஒன்றாய் இணைந்த சிவகங்கை சீமையின் வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் எடுத்த முதல் பெண் விடுதலை வீரா். பெண் என்ற எல்லைகளை உடைத்து, ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போா்க்களம் கண்ட தைரியத்தின் உயிா்ப்பான வரலாறு அவா். தலைமுறைகளைத் தாண்டி வழிகாட்டும் அவரது வீரத்தைப் போற்றி வணங்குவோம் என்றாா்.
