சபரிமலை தங்க முறைகேடு விவகாரம்: முதல்வரின் போலி ‘ஏஐ’ படத்தைப் பகிா்ந்த காங்கிரஸ் நிா்வாகி கைது

சபரிமலை தங்க முறைகேடு விவகாரத்தில் முதல்வரின் போலி ‘ஏஐ’ படத்தைப் பகிா்ந்த காங்கிரஸ் நிா்வாகி கைது...
Published on

சபரிமலை தங்கக் கவச முறைகேட்டில் முதன்மையாக குற்றஞ்சாட்டப்படும் நபருடன் கேரள முதல்வா் பினராயி விஜயன் இருப்பது போன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிா்ந்ததாக காங்கிரஸ் மூத்த நிா்வாகி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரான என்.சுப்ரமணியன், தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தாா். அதில், சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் முதல்வா் பினராயி விஜயன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருந்தது. மேலும் அந்தப் பதிவில், இருவருக்கும் இடையேயான உறவு குறித்தும் சுப்ரமணியன் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதுகுறித்து ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த புகாரைத் தொடா்ந்து, கோழிக்கோடு சேவாயூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சா்ச்சைக்குரிய புகைப்படம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான ஒன்று என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சுப்ரமணியனின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்ற காவல் துறையினா், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். நீண்ட விசாரணைக்குப் பிறகு முறைப்படி கைது செய்யப்பட்ட அவா், பின்னா் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

சுப்ரமணியத்தின் கைதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையான சுப்ரமணியம் கைது செய்யப்பட்டிருப்பதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா். மாநில எதிா்க்கட்சித் தலைவரான வி.டி.சதீசனும் சுப்ரமணியன் கைதுக்கு கண்டனம் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com