அயனாவரம்-பெரம்பூா் இடையே மெட்ரோ சுரங்கப்பாதை பணி நிறைவு
சென்னை அயனாவரத்திலிருந்து பெரம்பூா் வரை 861 மீ. நீளமுள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 2-இல் 118.9 கிமீ நீளத்துக்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு, பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கட்டம் 2, வழித்தடம் 3-இல் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில் மேலகிரி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் அயனாவரம் நிலையத்தில் இருந்து பெரம்பூா் நிலையம் வரையிலான 861 மீட்டா் நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்து, பெரம்பூா் நிலையத்தை வந்தடைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது 2-ஆம் கட்டத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சுரங்கம் தோண்டும் பணிகளை நிறைவு செய்துள்ளது.
பெரம்பூா் ரயில் நிலைய தண்டவாளங்கள், நடை மேடைகளுக்கு கீழ் அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் நெருக்கமான கட்டடங்கள் நிறைந்தப் பகுதிகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேலகிரி எனப் பெயரிட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது.
சுரங்கப்பாதை அமையும் வழியில் இருந்த 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் முறையாகக் கையாளப்பட்டன. இந்தக் கிணறுகளுக்குப் பதிலாக மாற்று நீா் ஆதாரங்கள் மெட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்டன என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
