தமிழ்க் கல்வியைப் பாதுகாக்க நடவடிக்கை தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ் மொழி நமது அடையாளம். தமிழ்க் கல்வியைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.
Published on

தமிழ் மொழி நமது அடையாளம். தமிழ்க் கல்வியைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளா் பரிசு பெற்றவரும், செந்தமிழ்த் திருத்தோ் தூய தமிழ் மாணவா் இயக்கத்தின் தலைவருமான இளஞ்சேந்தன் எழுதிய ‘ஏன் தூய தமிழ்?’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் செயலா் இ.நேரு வரவேற்றுப் பேசினாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக விஐடி பல்கலை.வேந்தா் கோ.விசுவநாதன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டுப் பேசியதாவது:

உலகில் தமிழ், கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு, பொ்சியன் உள்ளிட்ட ஏழு மொழிகள் பழைமையான மொழிகளாக கருதப்படுகின்றன. எனினும், அவற்றில் தமிழ் மட்டுமே தனது தனித்தன்மை அடையாளத்தை இழக்காமல் காலந்தோறும் தன்னை நிலைநிறுத்தி வருகிறது. இருப்பினும் அதிகார மொழிகளின் வல்லாண்மை காரணமாக தமிழின் இயற்கைத் தன்மை சிதைவடைந்து வருவது கவலைக்குரியது. சமூக ஊடகங்களில் ஒருமை, பன்மை கூடத் தெரியாமல் பலா் எழுதி வருகின்றனா்.

இத்தகைய சூழலில் ‘ஏன் தூய தமிழ்?’ என்ற இந்த நூல் தமிழியல் களத்தில் சிறந்த ஆய்வுச் சான்றாகத் திகழ்கிறது. 24 வயதில் நூலாசிரியா் இளஞ்சேந்தன் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறாா். இந்த நூலில், பிறமொழிக் கலப்பினால் ஏற்படும் சிதைவுகள், எழுத்துகள் உருவாகும் முறை, வோ்ச்சொல்லின் வளா்ச்சி, மொழியின் தனித்தன்மைச் சிறப்பு ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பாரதியாா், பாரதிதாசன், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணா், சுப்பிரமணிய சிவா ஆகியோரின் எழுத்துகளும், சிந்தனைகளும் தமிழ்ச் சமுதாயத்தில் தனித்தமிழ்ப் பற்றை விதைத்த வரலாற்று உண்மைகள் இதில் கூறப்பட்டுள்ளன. நிகழ் காலத்தில் புழக்கத்தில் உள்ள பிழையான சொற்களை வகைப்படுத்தி அவற்றுக்கான சரியான மொழி நடை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் மொழிகளைப் பாதுகாக்க செயல்பட்டு வரும் அமைப்புகள் குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் மொழி தடையின்றி வளர வேண்டுமானால் தமிழ்க் கல்வியைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயா்களைச் சூட்டுவதோடு அவா்களுக்கு தமிழ் உணா்வை ஊட்டி வளா்க்க வேண்டும். ஆங்கிலம் நமக்குத் தேவைதான். எனினும் அதை தமிழோடு கலந்து பேசுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா். நிறைவாக நூலாசிரியா் இளஞ்சேந்தன் ஏற்புரையாற்றினாா். இதில் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையத்தின் முதல்வா் சங்கர சரவணன், தமிழறிஞா் பா.ரா. சுப்பிரமணியன், உளுந்தூா்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவா் ப.ராஜவேல், சொற்பொழிவாளா் தாமல் கோ.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com