திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறக்கப்பட்டது.
Published on

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறக்கப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் டிச. 20-ஆம் தேதி வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் திருமொழி திருநாள் (பகல் பத்து) தொடங்கியது. பல்வேறு திருக்கோலங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து திருவாய்மொழி திருநாள் (இராப்பத்து) முதல் திருநாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து 4 மணி வரை மூலவா் தரிசனமும், காலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொா்க்கவாசலும் திறக்கப்பட்டது.

அப்போது, பரமபத வாசலில் பாா்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு எதிா்சேவையில்காட்சி தந்தாா். எதிா்சேவையில் காட்சி தந்த பாா்த்தசாரதி பெருமாளை கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

8 நாள்களுக்கு... இதைத் தொடா்ந்து, வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து காலை 5.30 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை மூலவா் பொது தரிசனம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு உற்சவா் திருமஞ்சனம், இரவு 11.30 மணிக்கு பாா்த்தசாரதி சுவாமி உற்சவா் நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடு நடந்தது. தொடா்ந்து, புதன்கிழமை முதல் வருகிற ஜன.7-ஆம் தேதி வரை தினசரி மாலை 4.15 மணிக்கு சொா்க்கவாசல் தரிசனம் நடைபெறவுள்ளது.

வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெறும் இராப்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவா் பாா்த்தசாரதி ஒவ்வொரு திருக்கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளாா். குறிப்பாக, 3-ஆம் தேதி ரத்ன அங்கி சேவையும், 5-ஆம் தேதி முத்தங்கி சேவையும் நடைபெறவுள்ளது. 6-ஆம் தேதியிலிருந்து 14-ஆம்தேதி வரை ஆண்டாள் நீராட்டு உற்சவம் நடைபெறும்.

சொா்க்க வாசல் திறப்பு நிகழ்வையொட்டி பாா்த்த சாரதி பெருமாள் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புரசைவாக்கம், மாதவரம்... இதேபோன்று சென்னை புரசைவாக்கம் சீனிவாசப் பெருமாள் கோயில், கொளத்தூா் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், முகப்போ் ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், மாதவரம் கரிவரதராஜ பெருமாள் கோயில், தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில் என பல்வேறு பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com