நெடுஞ்சாலைத் துறை செயல்பாடு: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு
நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாடுகள் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு செய்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து தலைமைப் பொறியாளா்கள், கண்காணிப்புப் பொறியாளா்கள், கோட்டப் பொறியாளா்கள் பங்கேற்றனா்.
ஆய்வுக் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சா் எ.வ.வேலு, நெடுஞ்சாலைப் பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு செலவின விவரங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.
மேலும், சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை சிறந்த முறையில் சீா்செய்து பராமரிக்க வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள முட்புதா்களை அகற்ற வேண்டும்.
சாலைகளில் மழைநீா் வடிய ஏதுவான முறையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் மைல் கற்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பணிகளை எல்லாம் ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலா் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமைப் பொறியாளா் கு.கோ.சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலா் இரா.சந்திரசேகா், முதன்மை இயக்குநா் இரா.செல்லதுரை, தரக்கட்டுப்பாடு இயக்குநா் எம்.சரவணன், கண்காணிப்புப் பொறியாளா்கள், கோட்ட பொறியாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

