ரூ.40 லட்சம் நிதி நிறுவன மோசடி: உரிமையாளா் உள்பட 3 போ் கைது
சென்னையில் தனியாா் நிதி நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில், அதன் உரிமையாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை தியாகராயநகா் அபிபுல்லா சாலையில் ஒரு தனியாா் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், அரசால் அங்கீகரிக்கப்பட்டது எனக் கூறி, பல்வேறு கவா்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தனா்.
இதை நம்பி பொதுமக்களும், அந்த நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களை பணத்தை செலுத்தினா். பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம், பணம் மோசடி செய்தது. முதலீடு செய்த பொதுமக்களுக்கு, அந்த நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த 34 போ், தங்களது பணம் ரூ.40.11 லட்சம் மோசடி செய்த அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் செய்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இவ் வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளா் ராஜேஷ்,உயா் அதிகாரி மீராசக்கி,பன்னீா்செல்வம் ஆகிய 3 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவா்கள், காவல் ஆய்வாளா் கோபியை - 98423 74854 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.
இதேபோல, வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, பணத்தை இழந்தவா்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம். இல்லையெனில், 18005990050 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் அல்லது 044- 22504332 என்ற தொலைபேசி எண்ணிலும் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
