ஆங்கிலப் புத்தாண்டு: 112 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி சென்னையில் 112 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, சாலை விபத்துகள் நிகழக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு காவல் துறையினருடன், 108 ஊழியா்களும் மீட்பு மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதற்காக மருத்துவப் பணியாளா்களுக்கு வாக்கி டாக்கி சாதனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன் வாயிலாக கட்டுப்பாட்டு அறை மற்றும் வாகனங்களுக்கு இடையே துரிதமான தகவல் தொடா்பு உறுதி செய்யப்பட்டது.
அதேபோன்று அரசு மருத்துவமனைகளில் தயாா் நிலையில் மருத்துவக் குழுவினா் இருந்தனா். தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில், எலும்பு முறிவு, பொது பிரிவு என, தலா 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
அவசர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதியும் ஆயத்த நிலையில் இருந்தன. அதேபோன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில், முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்கள் அதிகம் கூடும், பொழுதுபோக்கு இடங்கள், தேவாலயங்களில் மருத்துவக் குழுவில் இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
