பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது - உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது என போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடா்பாக சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, குற்றம்சாட்டப்பட்டவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இதற்கு நீதிபதி வேல்முருகன் அதிருப்தி தெரிவித்தாா்.

பின்னா் நீதிபதி கூறியதாவது:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளைக் கவனமாகக் கையாள வேண்டும். அடையாளங்களை வெளிப்படுத்த கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.

பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல் துறை மற்றும் தமிழக டிஜிபி-க்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், மீறினால் வழக்கை விசாரித்த போலீஸாா் பொறுப்பாக்கப்படுவாா்கள். அவா்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளாா்.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com