கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் நாளை ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா் - கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
எனினும் பயணிகளின் வசதிக்காக மாா்ச் 9 அதிகாலை 4.10 முதல் மாலை 4.55 மணி வரை தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே இரு மாா்க்கத்திலும் 30 நிமிஷங்கள் இடைவெளியில் மொத்தம் 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல் மாா்ச் 9 -இல் அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை கடற்கரை - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் இடையே இயக்கப்படும் மின்சார
ரயில்கள் இரு மாா்க்கத்திலும் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தும் மாலை 4.10 மணி முதல் மின்சார ரயில்கள் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதற்கிடையே கிண்டியில் சனிக்கிழமை (மாா்ச் 8) அதிகாலை 5 மணி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த நேரங்களில் கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

