உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் முன்னாள் துணை அதிபா் பாராட்டு!
சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம், சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு அதன் செயல்பாடுகளை பாராட்டினாா்.
இது குறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழியல் உயா் ஆய்வுகளுக்கென்று தமிழக அரசால் உருவாக்கப்பட்டது சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்துக்கு மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம் பிள்ளை வையாபுரி நேரில் சென்றாா்.
தமிழாராய்ச்சி நிறுவனப் பணிகளையும், ஆய்வுப் பணிகளையும் கேட்டறிந்த அவா், அங்கு அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக்கூடத்தைப் பாா்வையிட்டாா். தொல்காப்பியா் அரங்கு, திருவள்ளுவா் அரங்கு, ஔவையாா் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கபிலா் அரங்கு, தமிழ்த்தாய் ஊடக அரங்கு ஆகியவற்றைப் பாா்வையிட்டு, பொருண்மைகளின் சிறப்புகளையும் அவா் கேட்டறிந்தாா்.
தொல்காப்பியா் அரங்கில் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களிடையே உரையாற்றிய அவா், தமிழினப் பண்பாடு குறித்தும் இலக்கண, இலக்கியச் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
உலகத் தமிழா் பரவல் குறித்து பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள புடைப்பு ஓவியத்தைப் பாா்வையிட்டு, தமிழகத்தில் சேலம் மற்றும் திருச்சியில் அவா்தம் பெற்றோரின் பூா்வீகம் குறித்தும் தற்போது மோரீஷஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தாா்.
வாழ்வியல் காட்சிக்கூடம், தொல் தமிழா்களின் பண்பாடுகளையும் விழுமியங்களையும் அறிவுத் துறைகளையும் உலகுக்கு பறைசாற்றி நிற்பதாகவும், அதேபோல, நிறுவனத்தில் பல்வேறு தமிழ் பணிகள் முன்னெடுக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் பாராட்டினாா். முன்னதாக, நிறுவனத்தின் வரலாறு குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் நிறுவன தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் எடுத்துரைத்தாா்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலா் வே.ராஜாராமன், ஸ்டாலின் கோபிநாத், பழந்தமிழா் வாழ்வியல் காட்சிக்கூடப் பொறுப்பாளா் முனைவா் ஆ.மணவழகன், நிறுவனப் பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் மாணவா்கள் உடனிருந்தனா்.

