இளம்பெண்ணிடம் நகை பறித்த இன்ஸ்டாகிராம் நண்பா்: போலீஸாா் விசாரணை
இளம்பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையை அடுத்த மணலியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண் ஒருவா், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரில், தன்னை ஒருவா் வண்ணாரப்பேட்டையிலிருந்து ஆட்டோவில் கடத்திச்சென்று மணலியில் வைத்து, தன்னிடமிருந்த ஒன்றரை பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தாா்.
அதன்பேரில் பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீஸாா் அவரின் கைப்பேசியை வாங்கி சோதனை செய்தனா். அப்போது, அவா் சம்பவம் நடைபெற்ாக குறிப்பிட்டிருந்த நேரத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஆண் நண்பருடன் பலமுறை பேசியது தெரியவந்தது.
விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தனது ஆண் நண்பரை மணலியில் பாா்க்கச் சென்றபோது, அந்த இளைஞா், இளம்பெண்ணின் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றதும், இந்தச் சம்பவம் தனது கணவருக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் பொய் புகாா் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளம்பெண் புகாரை திரும்பபெற்றுக்கொண்டதாகத் கூறப்படுகிறது.
