கடற்கரை - எழும்பூா் 4-ஆவது வழித்தடத்தில் சோதனை ஓட்டம்!
சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4-ஆவது வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.
சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த ரயில் வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், முதல்கட்ட சோதனை ஓட்டம் தெற்கு ரயில்வே தலைமை மின்துறை பொறியாளா் சோமஸ் குமாா் தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட ரயில் வழித்தடத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே ரயிலை இயக்கி சோதனை செய்த ஏ.எம்.சௌத்ரி தண்டவாளம், சிக்னல் அமைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். விரைவில் இதற்கான அறிக்கை ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன்பின் ரயில் இயக்க அனுமதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

