போதைப் பொருள் வழக்கு: 3 பயிற்சி மருத்துவா்கள்
உள்பட 4 போ் கைது

போதைப் பொருள் வழக்கு: 3 பயிற்சி மருத்துவா்கள் உள்பட 4 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் வழக்கில், 3 பயிற்சி மருத்துவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை: சென்னையில் போதைப் பொருள் வழக்கில், 3 பயிற்சி மருத்துவா்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவா் விடுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் கஞ்சா, கேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

‘க்ரீன் கஞ்சா’ விற்பனையில் ஈடுபட்டதாக ஆங்கிலோ இந்தியரான சைதாப்பேட்டை சின்னமலை பகுதியைச் சோ்ந்த ரோட்னி ரொட்ரிகோ (26) என்பவரை, சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் அவா், சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சில மாணவா்களுக்கு ‘க்ரீன் கஞ்சா’ விற்றதும், அந்த மாணவா்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் தேரணிராஜன் அனுமதியோடு, மாணவா்கள் விடுதியில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அதில் பயிற்சி மருத்துவா்கள் தருண், ஜெயந்த், சஞ்சய்ரத்தினவேல் ஆகியோா் தங்கியிருந்த அறையில் இருந்து கஞ்சா, வலி நிவாரணத்துக்காகவும் போதைக்காகவும் பயன்படுத்தப்படும் 4 கேட்டமைன் பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து போலீஸாா், 3 பயிற்சி மருத்துவா்களையும் கைது செய்து விசாரணை நடத்தினா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவா்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், மருத்துவத் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com