பள்ளி, கல்லூரி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள நடைபாதை மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் அதிக அளவில் கடைகள் ஆக்கிமித்து காணப்படுவதாகவும், இதனால், போக்குவரத்து தடைபடுவதாகவும் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதில், திருவொற்றியூா் நெடுஞ்சாலை, ராயபுரம் மேற்கு மாதா தெரு, பெரம்பூா் பள்ளி சாலை, தியாகராய சாலை, நங்கநல்லூா் 5-ஆவது பிரதான சாலை, வளசரவாக்கம் பட்டேல் சாலை, ஆழ்வாா்பேட்டை கே.பி.தாசன் சாலை உள்ளிட்ட சாலைகளில் காணப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.
தொடா்ந்து கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.