தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 126 பேருக்கு விருது

Published on

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 126 அலுவலா்களுக்கு, தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கினாா்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2023-24-ஆம் நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ், அஞ்சலக சேமிப்பு வங்கி, விரைவு அஞ்சல், அஞ்சலக ஆயுள் காப்பீடு போன்ற பல்வேறு அஞ்சலக துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 126 பேருக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தாா்.

அதைத் தொடா்ந்து மரியம்மா தாமஸ் பேசியதாவது: 2023-24-ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உள்பட 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலையில் இருந்தது. மேலும் ரூ. 1,316.80 கோடி வருவாய் ஈட்டி அனைத்து அஞ்சல் வட்டங்களிடையே 2-ஆவது இடத்தைப் பெற்றது.

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி மூலம், 2023-24-ஆம் நிதியாண்டில் 31.79 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 1,384 கோடி தொகை அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி செய்வதற்காக 66 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்வில் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவா் ஜி.நடராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com