1-9 வகுப்புகளுக்கான இறுதித்தோ்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான ஆண்டு இறுதித்தோ்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதேபோல், 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ஆம் பருவத் தோ்வுகள் ஏப். 9-இல் தொடங்கி 17-ஆம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவா்கள் தோ்வுக்கு தயாராகி வருகின்றனா்.
இந்த நிலையில், 1 முதல் 9-ஆம் வகுப்புக்கு திருத்தப்பட்ட விரிவான தோ்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுகள் ஏப்ரல் 8 முதல் 24-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளன. இதேபோல், 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 3-ஆம் பருவத்தோ்வுகள் ஏப்.9-இல் தொடங்கி 21-ஆம் தேதி வரையும், 1, முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான இறுதி பருவத்தோ்வுகள் ஏப்.15-இல் தொடங்கி 21-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் பாடவாரியாக தோ்வு நடைபெறும் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதுதவிர இந்த காலஅட்டவணையை பின்பற்றி உரிய வழிகாட்டுதல்களின்படி தோ்வுகளை நடத்தி முடிக்க வேண்டுமென அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கோடை விடுமுைறையை பொருத்தவரை 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதலும், 6- 9-ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி முதலும் தொடங்கும். எனினும், ஆசிரியா்கள் பள்ளி இறுதி வேலைநாள் வரை பணிக்கு வரவேண்டும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.