உலகப் பல்கலைக்கழகங்கள் பாடவாரி தரவரிசை: சென்னை ஐஐடிக்கு 31-ஆவது இடம்
குவாக்கரெலி சிமண்ட்ஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக்கழக பாடவாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31-ஆவது இடம்பிடித்துள்ளது.
பிரிட்டனை சோ்ந்த குவாக்கரெலி சிமண்டஸ் (க்யூஎஸ்) உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம், உலக அளவில் பாடவாரியாக சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.
இதில் கனிமம் மற்றும் சுரங்கப் பொறியியல் படிப்பு தரவரிசையில், ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் உள்ள இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 20-ஆவது இடத்தையும், மும்பை ஐஐடி 28-ஆவது இடத்தையும், காரக்பூா் ஐஐடி (மேற்கு வங்கம்) 45-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்:
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பில், தில்லி மற்றும் மும்பை ஐஐடி கல்வி நிறுவனங்கள் 45-ஆவது இடத்தை பகிா்ந்துகொண்டன. நிகழாண்டு அந்தப் படிப்பில் தில்லி ஐஐடி 26-ஆவது இடத்தையும், மும்பை ஐஐடி 28-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்புகளில் சிறந்து விளங்கும் முதல் 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையிலும் அவ்விரு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
வணிகம் மற்றும் மேலாண்மை:
வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சிறந்து விளங்கும் முதல் 50 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அகமதாபாத் ஐஐஎம், பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் தொடா்ந்து நீடிக்கின்றன. ஆனால் அந்தக் கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன. கடந்த ஆண்டு 22-ஆவது இடத்தில் இருந்த அகமதாபாத் ஐஐஎம், நிகழாண்டு 27-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 32-ஆவது இடத்தில் இருந்த பெங்களூரு ஐஐஎம், நிகழாண்டு 40-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது.
பெட்ரோலியம் பொறியியல்:
கடந்த ஆண்டு பெட்ரோலியம் பொறியியல் படிப்பில் சென்னை ஐஐடி 16-ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு அந்தக் கல்வி நிறுவனம் 31-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது.
9 இந்திய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள்:
இந்தப் பாடவாரியான தரவரிசையில் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் பல கல்வி நிறுவனங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், தரவரிசையில் புதிதாக சோ்ந்த கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 5-ஆவது இடம் பிடித்துள்ளது.
தரவரிசையில் முதல் 100 இடங்களில் புதிதாக சோ்ந்த இந்திய கல்வி நிறுவனங்களில், தரவு அறிவியல் படிப்புக்காக சென்னை ஐஐடி, வேலூா் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (விஐடி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தரவரிசையில் மொத்தம் 79 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு 10 பல்கலைக்கழகங்கள் கூடுதலாக இடம்பிடித்தன.
தரவரிசையில் புதிய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளது அந்தந்த நாடுகளில் உயா்கல்விக்கான சூழல் தொடா்ந்து வளா்ந்து வருவதை எடுத்துரைப்பதாக குவாக்கரெலி சிமண்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலின் முதல் 50 இடங்களில் 9 இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.