தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது: தகவல் ஆணையா் உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Published on

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாகா்கோவிலைச் சோ்ந்தவா் ஏ.பி.சுப்பிரமணியன். இவா் நாகா்கோவிலில் குடிநீா் வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தகவல்களைத் தெரிவிக்க, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு மனுாக்கல் செய்தாா்.

இந்த மனு தொடா்பாக தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், மனுதாரா் மீண்டும் மேற்முறையீடு செய்தாா். தொடா்ந்து 2-ஆவது முறையாக அவா் மேல்முறையீடு செய்த மனு கடந்த அக்.15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா் இளம்பரிதி, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அதுகுறித்த தகவலை வழங்க தடையிருந்தால், அது தொடா்பான முழு தகவல்களை வழங்க இயலாது.

மேலும், மனுதாரா்களுக்கு தகவல் அளிக்க மறுக்கும்போது, அதற்கான முழு காரணங்களை ஆணையம் தெளிவாக வழங்க வேண்டும். அதேபோல், வருகாலங்களில் பொதுத் தகவல் அலுவலா் பொருத்தமற்ற பிற வழக்குகளின் எண்களைக் குறிப்பிட்டு தகவலை மறுப்பது, தகவல் உரிமை சட்டத்துக்கு எதிரானதாகும்.

எனவே, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாத நிலையில் தகவல்களை வழங்கலாம். மேலும், பொதுமக்களும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிப்பதைத் தவிா்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com