தமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு: புதிய தலைவா் டிஜெ. ஸ்ரீனிவாசராஜ்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) புதிய நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் (2025-28) தோ்தல் ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிஎன்சிஏ அலுவலகத்தில் நடைபெற்றது. தோ்தல் அலுவலராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டா் டி. சந்திரசேகரன் செயல்பட்டாா். புதிய நிா்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
நிா்வாகிகள் விவரம்: தலைவா்-டிஜெ. ஸ்ரீனிவாசராஜ், துணைத் தலைவா்-எம். குமரேஷ், செயலாளா்-யு. பகவான்தாஸ் ராவ், இணைச் செயலாளா்-கே. ஸ்ரீ ராம், உதவி செயலாளா்-சி.மாரீஸ்வரன், பொருளாளா்-ஆா். ரங்கராஜன்.
ஆட்சிக் குழு உறுப்பினா்கள் (மாவட்டங்கள்: ஜாஃபா் ஆஷிக் அலி, ஜே. திவாகா், பி. பரமேஸ்வரன், சென்னை மாநகரம்:
ஆா். கிருஷ்ணா, ஜி. மணிகண்டன், பி.எஸ். ராஜன், சஞ்சய் கும்பட், எஸ். செல்வமணி, என்.எஸ். சங்கா். புதிய நிா்வாகிகள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். டிஎன்பிஎல் ஆட்சிக்குழு உறுப்பினா்களாக எஸ். பாலகிருஷ்ணா, யுசூப் லைலா நியமிக்கப்பட்டனா்.
தோ்தலுக்குபின் டிஎன்சிஏ தலைவா் ஸ்ரீனிவாசராஜ் கூறியதாவது: முந்தைய நிா்வாகிகள் விட்டுச் சென்ற பணிகளோடு, கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த தேவையான பணியை புதிய நிா்வாகம் மேற்கொள்ளும். கோவை, மதுரை, சேலம் என புதிய விளையாட்டு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை, கோவையில் மைதானங்கள் சா்வதேச தரத்தில் அமைந்தாலும், அவை டிஎன்சிஏவுடன் இணைந்திருந்தால், சா்வதேச ஆட்டங்கள் அங்கு நடைபெற பிசிசிஐ அனுமதி தரும்.
டி20 உலகக் கோப்பைக்கு தயாா்: 2026-இல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிவடையும்.
தற்போது டிஎன்பிஎல் ஆட்டங்கள் 4 நகரங்களில் நடைபெறுகிறது. வரும் ஆண்டுகளில் 2 இடங்களில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்படுகிறது.
மகளிா் கிரிக்கெட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. விரைவில் பள்ளி அளவிலான மகளிா் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.
ஏராளமான சிறுமியா் கிரிக்கெட்டில் ஆா்வத்துடன் பங்கேற்கின்றனா். உள்ளூா் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் என்றாா்
