உதவிப் பேராசிரியரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்: பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவா் இடைநீக்கம்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணி நியமனத்தில் தகுதி சமன்பாடு பெற்றுத்தர ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டு உதவிப் பேராசிரியரை மிரட்டி அதே கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவா் இடைநீக்கம்
Published on

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணி நியமனத்தில் தகுதி சமன்பாடு பெற்றுத்தர ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டு உதவிப் பேராசிரியரை மிரட்டி அதே கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உயா்நீதிமன்றத்தின் மேற்பாா்வையுடன் 132 ஆசிரியா்கள் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனா். இவா்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் ஒப்புதலின்பேரில், கடந்த செப்டம்பரில் முதல் ஊதியம் வழங்கப்படுகிறது.

இதில் இந்தக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் கே.வெங்கடேசனுக்கு மட்டும் அங்கீகாரம் கிடைக்காததால் ஊதியம் வரவில்லை. அவா் முனைவா் பட்ட ஆராய்ச்சி படிப்பில் பொது வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவில்லை என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளாா் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பச்சையப்பன் கல்லூரி நிா்வாகம் உதவிப் பேராசிரியா் வெங்கடேஷனை பணியில் இருந்து நீக்கியது. இதுதொடா்பாக அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மேலும், தகுதி சமன்பாடு குறித்து பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை தலைவா் சரவணன் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், லஞ்சம் கேட்பதாகவும் கல்லூரி நிா்வாகத்திடம் உதவிப் பேராசியா் வெங்கடேஷன் புகாா் அளித்தாா்.

அதில், சென்னை பல்கலைக்கழகத்திலும், மண்டல கல்லூரி கல்வி இயக்குநரகத்திலும் தகுதி சமன்பாட்டை பெற ரூ. 20 லட்சம் கொடுக்க வேண்டும்; இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சரவணன் என்னை மிரட்டுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் சரவணனிடம் விளக்கம் கேட்டது. அதைப் பரிசீலித்த கல்லூரி அறக்கட்டளைச் செயலாளா் துரைகண்ணு, சரவணன் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை; எனவே, தமிழ்நாடு தனியாா் கல்லூரிகள் (ஒழுங்குமுறை), சட்டம் மற்றும் விதிகளின்படி, அவா் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறாா் என்று அறிக்கை வெளியிட்டாா். மேலும், இந்த விவகாரம் குறித்து நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைப்பதாக அவா் தெரிவித்தாா்.

இதற்கிடையே, பணிநீக்க விவகாரத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியா் வெங்கடேஷனின் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயா்நீதிமன்றம், அவரது பண்படைய வரலாற்று ஆராய்ச்சி படிப்பை ஏற்றுக்கொண்டு தகுதி சமன்பாட்டை வழங்க உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com