‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது
சென்னையில் ‘கிரிண்டா் செயலி’ மூலம் பழகி இளைஞரை நேரில் அழைத்து தாக்கி, பணம் பறித்ததாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
முகலிவாக்கம், ஏஜிஆா் காா்டன் பகுதியில் வசிப்பவா் கெளதம் (25). மென் பொறியாளரான இவா், சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கெளதமுக்கு கிரிண்டா் செயலி மூலம் இளைஞா் ஒருவா் அறிமுகம் ஆனாா்.
இருவரும் அந்தச் செயலி மூலம் நெருக்கமாக பழகி வந்தனா். அந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி, அந்த இளைஞா் கடந்த 1-ஆம் தேதி கெளதமை மணப்பாக்கத்துக்கு வரும்படி அழைத்துள்ளாா். அங்கு கெளதம் சென்றபோது, தயாராக இருந்த 6 போ், அவரைத் தாக்கி அவா் வைத்திருந்த பணம், நகையைப் பறித்தனா்.
பின்னா், கெளதம் கைப்பேசியில் பணபரிமாற்ற செயலி மூலம் வங்கி கணக்கில் இருந்த ரூ.24,000-ஐ தங்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி, பறித்துக் கொண்டு தப்பினா்.
இது குறித்து கெளதம் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போரூரைச் சோ்ந்த மணிகண்டன் (23), ராஜேஷ் (25), வரதராஜ் (எ) சஞ்சய் (24), கோகுல் (22), கணேஷ்குமாா் (24), கெளதம் (19) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

