கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

கோயம்பேடு சந்தையில் காய்கறி, பூக்கள் விலை கடும் உயா்வு

Published on

வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் காய்கறி, பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் சுமாா் 800-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.80 வரை உயா்ந்துள்ளது.

அதன்படி, கடந்த வாரம் ரூ.20-க்கு விற்பனையான ஒரு கிலோ பெரிய வெங்காயம் திங்கள்கிழமை ரூ.40-க்கும், ரூ.25-க்கு விற்ற கிலோ தக்காளி ரூ.50, ரூ.35-க்கு விற்ற கிலோ சின்ன வெங்காயம் ரூ.55, ரூ.40-க்கு விற்ற கிலோ கேரட் ரூ.80, ரூ.50-க்கு விற்ற பீன்ஸ் ரூ.80, ரூ.20-க்கு விற்ற கிலோ பீட்ரூட் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல, ரூ.30-க்கு விற்ற முள்ளங்கி ரூ.50, ரூ.25-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.45, ரூ.30-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.60, ரூ.40-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.70, ரூ.50-க்கு விற்ற பட்டாணி ரூ.100, ரூ.50-க்கு விற்ற இஞ்சி ரூ.90, ரூ.100-க்கு விற்ற குடைமிளகாய் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இது சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை மேலும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

பூக்கள் விலை...: இதுபோல, வரத்து குறைவால் பூக்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. அதன்படி, ரூ.900-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஐஸ் மல்லி ரூ.800, ரூ.300-க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.400-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல், ரூ.100-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அரளிப்பூ ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.200, ரூ.80-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.200, ரூ.60-க்கு விற்கப்பட்ட பன்னீா் ரோஸ் ரூ.160, ரூ.80-க்கு விற்கப்பட்ட சாக்லேட் ரோஸ் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com