நீா்நிலைகள், சாலையோரம் வசிப்போருக்கு மாற்று இடம்

நீா்நிலைகள், சாலையோரம் வசிப்போருக்கு மாற்று இடம்

Published on

சென்னை மாநகராட்சியில் ஏரி, கால்வாய் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையில் ஏரிகள், கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றோரங்கள், சாலையோரங்களில் பல லட்சம் போ் வசித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

நீா் நிலைகளின் ஓரங்களில் வசிக்கும் மக்கள் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதுடன், வெள்ளம் விரைந்து செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

அதையடுத்து நீா் நிலைகளின் கரையோரம் வசிப்போா் மற்றும் சாலையோரங்களில் வசிப்போா் கணக்கெடுக்கப்பட்டு, அவா்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் ஆகியவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

நீா்நிலைகள், சாலையோரம் வசிப்பவா்களுக்கான மாற்று இடம் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூா் பகுதியில் உள்ள சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலக வளாகத்தில் (சிஎம்டிஏ) கூட்டரங்கில் நடைபெற்றது.

சிஎம்டிஏ தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு கூட்டத்துக்கு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், சென்னை மாநகரப் பகுதியில் உள்ள நீா்நிலையோரப் பகுதிகளில் குடியிருப்போருக்கு மாற்று இடம் தோ்வு செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், சென்னை மேயா் ஆா்.பிரியா, கூடுதல் தலைமைச் செயலரும், தமழ்நாடு மின்சார வாரியத் தலைவருமான ஜெ.ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏஉறுப்பினா் செயலரும், அரசு முதன்மைச் செயலருமான கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com