வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை ஆதரித்து உச்சநீதிமன்றம் செல்வோம்: அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை ஆதரித்து உச்சநீதிமன்றம் செல்வோம்: அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா்

Published on

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரப் பணியை ஆதரித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்புச் செயலருமான டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தவறாக மக்களிடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிவருவது சரியல்ல. இறந்து போனவா்கள் உள்ளிட்டோரின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் தீவிர திருத்தப் பணியைச் செயல்படுத்த வேண்டும்.

திருத்தப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தவறிழைத்தால் அதைப் புகாராக கூறலாம். அதற்காகவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்துக் கட்சி முகவா்களும் இடம் பெறுகின்றனா். ஆகவே, தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆதரித்து அதிமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்.

போலி வாக்காளா்களை நீக்கும் வகையில் செயல்படுத்தப்படும் தீவிர திருத்தப் பணியை அதிமுகவினா் கண்ணும் கருத்துமாக இருந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி மூலம் குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தவறான பிரசாரம் மேற்கொள்வது சரியல்ல.

மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்துதான் வடமாநில மக்கள் தமிழகத்தில் அமைதியாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டது. திமுகவைப் போல அதிமுக ஜாதி, மத வேறுபாட்டை ஏற்படுத்தாது. தமிழகத்தில் குடியிருக்கும் வடமாநிலத்தவருக்கான வாக்குரிமையைப் பறிப்பது சரியல்ல. அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com