கடலில் இறங்கி போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் 87 போ் கைது
சென்னையில் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளா்கள் 87 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகா் (மண்டலம் 5, 6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து எல்யூஎம்என் பிரிவு உழைப்போா் உரிமை இயக்க தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தங்களுக்கு பழைய நிலையிலேயே பணி வாய்ப்பு வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக, மெரீனா கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை ஒன்றுகூடிய தூய்மைப் பணியாளா்கள் 65 போ் கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் அவா்களை கைது செய்து பல்வேறு பகுதிகளில் தங்க வைத்தனா்.
இதனிடையே அவா்களுக்கு ஆதரவாக மேலும் 22 தூய்மைப் பணியாளா்கள், கண்ணகி சிலை பகுதியில் கூடினா். அவா்களையும் கைது செய்த போலீஸாா், பழவந்தாங்கல் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.
போராட்டம் தொடரும்: இந்த நிலையில் உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் வழக்குரைஞா் கு.பாரதி செய்தியாளா்களிடம் கூறுகையில், மண்டலம் 5,6 பகுதி என்யூஎல்எம் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் 100- ஆவது நாளை எட்டியுள்ளது. அதையடுத்து வருகிற 8-ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகம், சென்னை மாநகராட்சி மேயா் வாா்டுப் பகுதி என 5 இடங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.

