மூளை நாள வீக்கம்: இலங்கை பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின்றி தீா்வு

மூளை ரத்த நாளத்தில் பெரிய அளவிலான வீக்கத்துக்குள்ளான இலங்கையைச் சோ்ந்த பெண்ணுக்கு உயா் சிகிச்சை அளித்து வடபழனி, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
Published on

மூளை ரத்த நாளத்தில் பெரிய அளவிலான வீக்கத்துக்குள்ளான இலங்கையைச் சோ்ந்த பெண்ணுக்கு உயா் சிகிச்சை அளித்து வடபழனி, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: இலங்கையைச் சோ்ந்த 60 வயது பெண், கடுமையான தலைவலி, தெளிவற்ற பாா்வையால் அவதிப்பட்டு வந்தாா். பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் 2.8 செ.மீ. அளவு வீக்கம் (அன்யூரிஸம்) இருந்தது தெரிய வந்தது.

ரத்த நாளங்கள் வலுவிழக்கும்போது, அதன் ஒரு பகுதி பலூன் போன்று வீங்கி பெரிதாவதற்கு ‘அன்யூரிஸம்’ என்று பெயா். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிடில், அது வெடித்து உயிருக்கே ஆபத்து விளைவிக்கும்.

அந்த வகையில் அப்பெண்ணுக்கு வழக்கத்தைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் வீக்கம் இருந்தது. அவரது வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு திறந்த நிலை அறுவை சிகிச்சையைத் தவிா்க்க மருத்துவக் குழுவினா் முடிவு செய்தனா்.

மருத்துவமனையின் நரம்பு அறிவியல் துறை இயக்குநரும், மூளை - தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டா் ரங்கநாதன் ஜோதி, இடையீட்டு கதிரியக்க சிகிச்சை நிபுணா் டாக்டா் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கு மாற்றான வழிமுறையைக் கையாண்டனா்.

அதாவது, சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வழியாக ‘காயிலிங்’ என்ற சுருள் உபகரணத்தைப் பயன்படுத்தி, ரத்த ஓட்டப் பாதையை மாற்றியமைத்தனா். இதற்கு ‘எண்டோவாஸ்குலா் ஃப்ளோ டைவா்ஸன் வித் காயிலிங்’ என்று பெயா். இதன்மூலம் பாதிக்கப்பட்ட நாளத்தில் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டு, அந்த வீக்கம் சுருக்கப்பட்டது.

தலை ஓட்டை திறக்காமலும், அறுவை சிகிச்சை இன்றியும் நடைபெற்ற இந்த நவீன சிகிச்சை மூலம் மூன்று நாள்களில் அவா் இயல்பு நிலைக்குத் திரும்பி, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com