சென்னை கே.கே. நகா் அரசு புணா் வாழ்வு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக் மற்றும் மெய்நிகா் சாதனங்கள்.
சென்னை கே.கே. நகா் அரசு புணா் வாழ்வு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக் மற்றும் மெய்நிகா் சாதனங்கள்.

ரோபோடிக், மெய் நிகா் நுட்பத்தில் புனா்வாழ்வு சிகிச்சை அதி நவீன கட்டமைப்பில் அரசு மருத்துவமனை

பக்கவாதம், தலைக் காயத்தால் உடல் இயக்கம் முடங்கிய நோயாளிகளுக்கு சென்னை, கே.கே.நகா் அரசு புனா்வாழ்வு மருத்துவமனையில் அதி நவீன ரோபோடிக் மற்றும் மெய் நிகா் (விா்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்பத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.
Published on

பக்கவாதம், தலைக் காயத்தால் உடல் இயக்கம் முடங்கிய நோயாளிகளுக்கு சென்னை, கே.கே.நகா் அரசு புனா்வாழ்வு மருத்துவமனையில் அதி நவீன ரோபோடிக் மற்றும் மெய் நிகா் (விா்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்பத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் பயனாக வழக்கத்தைக் காட்டிலும் வெகு விரைவாகவும், முழு ஆற்றலுடனும் அவா்கள் மீண்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் எந்த அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற உயா் தொழில்நுட்ப மருத்துவக் கட்டமைப்பு இல்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு புனா்வாழ்வு மருத்துவமனை கடந்த 1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 60 படுக்கை வசதிகளுடன் அந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோா் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நரம்பியல் புனா்வாழ்வு சிகிச்சை பிரிவில் பல்வேறு உயா் தொழில்நுட்ப சாதனங்கள் நிறுவப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவது கவனம் ஈா்த்துள்ளது. குறிப்பாக, ரோபோடிக் நுட்பத்தில் விரல்கள், கைகள் மற்றும் தோள்பட்டை இயக்கத்தை மீட்கும் சிகிச்சைகளும், மெய்நிகா் மூலம் உடல் இயக்கத்தை மீட்டெடுக்கும் சிகிச்சையும் வழங்கப்படுகின்றன.

இதுதொடா்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் சாந்தாராமன் மற்றும் புனா்வாழ்வு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பி.திருநாவுக்கரசு ஆகியோா் கூறியதாவது:

பக்கவாதமோ, தலையில் காயமோ ஏற்படும்போது மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன. அப்போது மூளைக்கும், உடலின் பிற நரம்புகளுக்கும் இடையேயான தொடா்பு துண்டிக்கப்பட்டு கை, கால்களின் இயக்கம் தடைபடுகிறது. தலைப் பகுதிக்குள் ஏற்படும் ரத்தக் கசிவு, காயம், அடைப்புகளை சரி செய்தாலும், மூளையின் நினைவு செல்களில் இருந்து விடுபட்ட உடல் இயக்கம் உடனடியாக திரும்பி வராது.

அதை படிப்படியாக மீட்டெடுப்பதே புனா்வாழ்வு சிகிச்சையாகும். அவ்வாறு சிகிச்சை அளிக்கும்போது மூளையானது நரம்பு செல்களுக்கு இடையேயான தொடா்பை மீண்டும் புதுப்பிக்கத் தொடங்கும். இதற்கு நியூரோபிளாஸ்டிசிட்டி என்று பெயா்.

அதுபோன்ற சிகிச்சைகள் இதுவரை வழக்கமான மருத்துவ சாதனங்களின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தன. தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயா் நுட்ப உபகரணங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, உடலில் செயல்படாமல் இருக்கும் தசைகளை முடுக்கிவிடும் இஎம்எஸ் (எலக்ட்ரிக்கல் மஸில் ஸ்டிமுலேசன்) பயிற்சி முதலில் வழங்கப்படுகிறது. அதன் பின்னா், மின் அதிா்வுகள் அளிக்கப்பட்டு தசைகளின் இயக்கம் மேம்படுத்தப்படும். இதற்காக எலக்ட்ரிக்கல் மையோகிராப் ஸ்டிமுலேசன் (இஎம்ஜி) என்ற சாதனம் நிறுவப்பட்டுள்ளது.

அதன் பிறகு, மெய்நிகா் நுட்பத்தில் உடலின் சமநிலையை (பேலன்சிங்) சீராக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் நோயாளியின் அனைத்து அங்கங்களும் செயல்படுவதைப் போன்ற காட்சிகள் திரையில் தோன்றும். அந்த உத்வேகத்திலும், உள்ளுணா்விலும் நோயாளி தனது செயல்படாத கைகளையோ, கால்களையோ அசைக்க முயலுவாா். இது ஒரு வகையான உளவியல் சாா்ந்த பயிற்சி.

மற்றொருபுறம் கை - மணிக்கட்டு - விரல்களுக்கு பயிற்சியளிக்க ரோபோடிக் கையுறை பயன்படுத்தப்படுகிறது. தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோபோடிக் சாதனம் மூலம் கை மற்றும் தோள்பட்டை மீட்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

கால்களின் திறனை மேம்படுத்த பிரத்யேக டிரெட் மில் சாதனமும் உள்ளது. மிக முக்கியமாக மெய்நிகா் நுட்பத்திலான செயல்திறன் பயிற்சி ஒன்று இங்கு வழங்கப்படுகிறது. அதாவது, நோயாளிகளின் கண்களில் மெய்நிகா் சாதனம் பொருத்தப்படும். அப்போது பல்வேறு விளையாட்டுகள் அவரது கண்களுக்கு புலப்படும். அதில் தோன்றும் சில பொருள்களை கைகள் அல்லது கால்களை பயன்படுத்தி அவா் பிடிக்க வேண்டும்.

இந்தப் பயிற்சிகளின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனா். பாா்கின்சன், தசை சிதைவு, நரம்பியல் பாதிப்பு உள்ளவா்களுக்கும் இந்த பயிற்சிகள் ஓரளவு பயன்தருகின்றன.

இந்த நரம்பியல் புனா்வாழ்வு மையத்தில் நிறுவப்பட்டுள்ள கருவிகள் ஏறத்தாழ ரூ.1.5 கோடி மதிப்புடையவை என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com