20 வால்வோ சொகுசு பேருந்துகள் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்: போக்குவரத்துக் கழகம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்துள்ள 20 வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள், டிசம்பா் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளை தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயா்த்தும் நடவடிக்கையைப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-2026-ஆம் நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. இந்தப் பேருந்துகளைக் கட்டமைக்கும் பணி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
இவற்றில் 110 பேருந்துகள் குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டது. எஞ்சிய 20 பேருந்துகளும் இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் ஆகும். இந்த 20 சொகுசு பேருந்துகளும் விரைவில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்படவுள்ளன.
இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் கூறியதாவது: வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளுக்கான கட்டமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையில், நிறுவன வளாகத்திலேயே, அதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டத்தில் கண்டறியப்படும் சிறிய அளவிலான குறைகளும் சரிசெய்யப்பட்டு இந்த மாத இறுதிக்குள் 20 சொகுசு பேருந்துகளும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். டிசம்பா் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். மீதமுள்ள குளிா்சாதன வசதியில்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 பேருந்துகள் கட்டமைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் பொங்கல் பண்டிகைக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.
